உயர் இரத்த அழுத்தம்: காரணங்கள், அளவு, குறைக்கும் வழிமுறைகள்

0

நாம் வாழும் இயந்திரமயமான சூழலில் அனைவரும் பணத்தையும், வசதியான வாழ்க்கையும் தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய சூழலில் சத்தான உணவைத் தவிர்த்துக் கிடைக்கும் துரித உணவுகளை உண்கிறோம். இப்போது இருக்கும் காலத்தில் சத்துள்ள உணவினை தவிர்த்து நம் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுகிறோம். இதனால் இப்போது உள்ள இளம் தலைமுறையினர் முதல் முதியவர் வரை மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிறோம். இதற்குத் தான் நம் முன்னோர்கள் “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்று கூறி வைத்தனர். எனவே நம் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதோடு சேர்த்து ஆரோக்கியமான உடல் நலத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். இவ்விரண்டினையும் தவற விட்டவர்கள் சந்திக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம். இந்நோய் முதலில் 40 வயதைக் கடந்த முதியவர்களுக்குத் தான் ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்று இளம் வயதினரும் கூட உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகின்றனர் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம்

 

Contents

இரத்த அழுத்தம்:

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது. எனவே இரத்தம் என்பது நம் உடலில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து செல்கிறது. இதனையே நாம் இரத்த ஓட்டம் என்று குறிப்பிடுகிறோம். ஆகையால் இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் (Blood Pressure) எனப்படுகிறது.

நம் இதயம் சுருங்கும் போதும், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தும் போதும் தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகமாகவும் இதயம் விரிந்து இரத்தம் இதயத்தில் நிரம்பும்போது தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் குறைவாகவும் காணப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும். சில நேரங்களில் உங்களால் இதை உணர முடியும். ஆனால் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் இதயத்தின் செயல்படும் தன்மை குறைக்கப்படுகிறாது. இச்செயல் “இதய செயலிழப்பு” (Heart Failure) ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வாதம் (பக்க‌ வாதம்) ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் எப்பொழுதும் விளக்கப் படுவதில்லை. ஆனால் பின்வருபவை ஒருவித காரணியாகச் செயல்படுகிறது.

 • குறைவான உடல் உழைப்பு
 • உடல் எடை அதிகரிப்பு (Overweight or Obese)
 • உணவில் சேர்க்கப்படும் அதிக அளவு உப்பு
 • குடிப்பழக்கம்
 • உயர் இரத்த அழுத்தத்திற்கான குடும்பப் பிண்ணனி

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை எனினும் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதால் பிற்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் வருவதை முற்றிலுமாகத் தடுக்கலாம்.

ஆய்வுகளில் 95 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பின்வரும் காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவை…

 1. புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
 2. ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம்.
 3. இரத்தம் குறைந்த அளவில் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல்
 4. சிறுநீரகக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள்
 5. அதிகக் கொழுப்பு தமனிகளில் படிவதனால் இருதய தமனிகள் சுருங்குதல்
 6. கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்றவையாகும்.

கவலை, பதற்றம், சோர்வு, பயம், மன அழுத்தம் போன்றவைகளால் கூட இரத்த அழுத்தத்தின் அளவு கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் உணவில் சேர்க்கப்படும் அளவிற்கு அதிகமான உப்பு இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இரத்தமானது உடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு சிறுநீரின் மூலமாக இரத்தத்தில் கலந்துள்ள உப்பினை வெளியேற்ற முனைகிறது. இவ்வாறான செயல்பாடுகளினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

1) மாறிவரும் உணவுப் பழக்கம்:

அன்றைய காலங்களில் சத்தான உணவு முறையையும், கடின உடல் உழைப்பையும் கொண்ட நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி பல காலம் வாழ்ந்தனர். ஆனால் மாறி வரும் இந்தக் கணினி உலகத்தில் நாம் அனைவரும் பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட, துரித உணவு வகைகளையும் கார்பன் டை ஆக்ஸைடால் காற்றேட்டப்பட்ட குளிர்பானங்களையும் பெரியோர் முதல் சிறு பிள்ளைகள் வரை அனைவரும் விரும்பி உண்கின்றனர்.

அதுவும் விரைவு உணவுகளில் (Fast Food) உணவு நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படும் அஜினோமோட்டோ எனப்படும் ஒருவகை உப்பு உண்பவர்களுக்கு அவ்வுணவின் மேல் தீராத விருப்பத்தை உண்டாக்குகிறது. இவ்வாறு வியாபார யுக்திக்காகப் பயன்படுத்தப்படும் அப்பொருள் உடலுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பின்பற்றப்படும் உணவுப் பழக்கங்களினால் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகும் இளம் வயதினரின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்து வருகிறது.

2. உடல் எடை:

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பகுதியான இளையோர்கள் வேலை தேடி மென்பொருள் நிறுவனங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் மாறி வரும் அவர்களின் வாழ்க்கை முறையும் மற்றும் உணவுப் பழக்கங்களும் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறு அதிகரிக்கும் உடல் எடையினால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. உடல் எடைக் கூடுவதும் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவபவர்களில் பாதியளவு வரம்புக்கு மீறிய எடை உடையவர்கள் மற்றும் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்கள்.

3. வயதானவர்கள்:

வயது ஆக ஆக மனிதனின் உடல் செயல்பாடுகளின் தன்மையில் அதிக அளவு மாற்றம் ஏற்படுகிறது. வயதானவர்களின் உட்புற உடல் பகுதிகளின் செயல்பாடுகள் குறைக்கப் படுகின்றன. இதனால் இரத்த நாளத் தமனிகளின் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. இதனாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. பெரும்பாலும் 40 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் தான் இந்த உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

4. கொழுப்பு (கொலஸ்ட்ரால்):

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளின் உட்சுவர் குறுகலடைவதற்கு முக்கியக் காரணம் உடலில் உள்ள அதிக அளவுக் கொழுப்பு தமனிகளில் படிந்து விடுவதே ஆகும். இதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனைத் தடுக்க இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் இவ்வாறு ஏற்பட்டால் சிறுநீரகத் திசுக்கள் அழிக்கப்படுகின்றன. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்தால் வாதம் (Stroke) ஏற்படுகிறது. இதுவே இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான் எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக உள்ளது.

மெலும் படிக்க: கொழுப்பின் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய விளக்கமான கட்டுரை

உங்கள் மருத்துவர் அல்லது செவிலியர் உங்களின் இரத்த அழுத்தத்தின் அளவினைக் கணக்கிடுவார்கள். ஒருவேளை உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவு 140/90 mmHg க்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் பலமுறை மறுபரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் இரத்த அழுத்தத்தின் அளவும் பகல் நேரங்களில் வேறுபடுகிறது. சில மனிதர்களுக்கு “வெள்ளை கோட் உயர் இரத்த அழுத்தம்” (White Coat Hypertension) அல்லது “வெள்ளை கோட் நோய்க்குறி” (White Coat Syndrome) என்னும் ஒரு நிலை உள்ளது. இந்நிலையில் மருத்துவர் உங்களைச் சோதனை செய்யும்போது மட்டுமே உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். இது நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படாத போதும் நிகழும்.

ஒருவேளை உங்களுக்கு “வெள்ளை கோட் உயர் இரத்த அழுத்தம்” (White Coat Hypertension) இருந்தால் மருத்துவ சோதனை முடிந்தவுடன் உங்களின் இரத்த அழுத்தம் பழைய சராசரி நிலைக்குத் திரும்பி விடுகிறது. இதனால் தான் நீங்கள் பலமுறை மறுபரிசோதனை செய்து கொளவது அவசியமாகிறது. இல்லையென்றால் உயர் இரத்த அழுத்தத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கண்டறிவது கடினமாகிறது.

உயர் இரத்த அழுத்தத்தின் அளவு:

அனைத்து இரத்த அழுத்த அளவும் இரண்டு எண்களைக் கொண்டுள்ளது. இரத்த அழுத்தம் mmHg என்று குறிப்பிடப்படுகிறது. mmHg என்பது பாதரசத்தில் மில்லிமீட்டர் ஆகும். உங்களது இரத்த அழுத்தம் அளவு 120/80 mmHg என்றால் உங்கள் மருத்துவர் அல்லது செவிலியரோ 80க்கு மேல் 120 என்று கூறுவார்கள். முதல் எண் என்பது உங்களுடைய இதயம் சுருங்கும்போது உங்கள் இரத்த நாளங்களில் ஏற்படும் அதிகபட்ச இரத்த அழுத்தத்தைக் குறிக்கும். இதனை ‘சிஸ்டோலிக்’ இரத்த அழுத்தம் (Systolic Blood Pressure) என்றும் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக 130 mmHg.

இரண்டாவது எண் என்பது உங்களின் இதயம் விரிவடையும்போது இரத்த நாளங்களில் இருக்கும் குறைந்த பட்ச இரத்த அழுத்தம் ஆகும். இதனை ‘டயஸ்டோலிக் இரத்த அழுத்தம்’ (Diastolic Blood Pressure) என்பார்கள். எடுத்துக்காட்டாக 75 mmHg.

உங்களது சராசரி இரத்த அழுத்தம் 120/80 ‍‍mmHg ஆக அல்லது 140/90 mmHg க்குக் குறைவாகவே இருக்க வேண்டும். இதயம் அல்லது இரத்த சுற்றோட்ட நோய்கள் ஏதேனும் இருப்பின் குறிப்பாகக் கரோனரி இதய நோய்கள் (Coronary Heart Disease), ஆன்ஜைனா, மாரடைப்பு, வாதம் மற்றும் நீரிழிவு அல்லது சிறுநீரகம் சார்ந்த நோய்கள் இருப்பின் உங்களுடைய இரத்த அழுத்த அளவு கட்டாயமாக 130/80 mmHg ஆக இருக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்:

உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளின் முழு விபரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட மோசமான மற்றும் முக்கிய விளைவுகள் பெருமளவில் காணப்படுகின்றன.

1) இதயம் நோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)

அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிப்படையும் மனிதனின் உள் உறுப்புகளில் முக்கியமான ஒன்று இதயம் தான். கொழுப்பின் மூலம் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து இரத்த நாளங்களின் குறுக்களவு மிகவும் சுருங்கி விடுகிறது. இதனால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினால் இதயம் செயலிழக்க நேரிடலாம். அல்லது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பை (Block) ஏற்படுத்தி மாரடைப்பு (Heart Attack) வரவும் நேரிடலாம்.

2) பக்கவாதம் (Stroke):

நாம் அனைவரும் மூளையின் கட்டளைக்கு ஏற்பத் தான் செயல்படுகிறோம். நம் கை, கால்கள் முதல் அதிலும் குறிப்பாக வெளிப்புற உறுப்புகல் அனைத்தும் மூளையின் கட்டளையை ஏற்று தான் செயல் படுகின்றன. இந்நிலையில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தத்தினால் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களால் ஏற்படும் இரத்த அழுத்தம் தாங்க முடியாமல் இரத்த நாளம் உடைந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதனால் மூளையில் சில பகுதிகளில் இரத்தம் உறைகிறது.

இந்த இரத்த உறைதலினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பகுதிக‌ளுக்கும் அதிலும் குறிப்பாகக் கை, கால்களுக்குச் செல்லும் நரம்புக‌ளின் செயல்திறன் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்து முடங்கிப் போகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு கை, கால்கள் செயலிழப்பதன் மற்றொரு பெயர்தான் வாதம் அல்லது பக்கவாதம் (Stroke or Paralysis). இதன் மூலம் நோயாளி படுத்தப் படுக்கையாகும் நிலையும் ஏற்படுகிறது.

3) சிறுநீரக செயலிழப்பு: (Kidney Failure or Renal Failure)

அதிக இரத்த அழுத்தத்தின் அடுத்த இலக்கு மூளை, இதயத்தைத் தொடர்ந்து சிறுநீரகம் தான். இதற்கும் காரணம் இரத்தக் கொதிப்பு (Blood Pressure) தான். இரத்தக் கொழுப்பு இருப்பது தெரியாமல் விட்டுவிட்டால் அது சிறுநீரகத்தைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்படும் திறன் குறைந்து இறுதியில் சிறுநீரகம் தன் செயல்படும் தன்மையை இழந்து விடும் நிலை (Kidney Failure) உருவாகும். அதே சமயம் சிறுநீரகத்தின் செயல்திற‌ன் வேறு சில காரணங்களாலும் பாதிக்கப் படுகிறது. இவ்வாறு சிறுநீரகம் பாதிக்கப் படும்போது அது இரத்தக் கொதிப்பு உருவாகும் வாய்ப்பை அதிகப் படுத்துகிறது. ஒருவர் நீண்ட காலம் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனது சிறுநீரகங்களின் செயல்படும் திறனைத் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி சோதித்து அறிந்து கொள்வது கட்டாயமான ஒன்று ஆகும்.

4) பார்வை இழப்பு:

இரத்த அழுத்த அதிகரிப்பின் மூலம் ஏற்படும் மற்றுமொரு விளைவு தான் பார்வை இழப்பு ஆகும். நம் விழிக்கோளத்தின் பின்புறம் ஏராளமான இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை மூளையோடு தொடர்புடையவை ஆகும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தத்தினால் இரத்தக் குழாய்களில் ஒருவித வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பினால் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இதன் மூலம் பார்வை குறைவு மற்றும் குருட்டுத் தன்மை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மூளை செயலிழப்பது நிரந்தரமான பார்வை இழப்புக்கு இட்டுச் செல்கிறது.

5) உயர் இரத்த அழுத்த நெருக்கடி:

சில வேளைகளில் இரத்த அழுத்தம் விரைவில் தீவிரமடையும்போது அதாவது இரத்த அழுத்தத்தின் அளவு 180/110 mmHg க்கு மேல் செல்வது தான் “உயர் இரத்த அழுத்த நெருக்கடி” (Hypertensive Crisis) ஆகும்.

தீவிரமான தலைவலி, மூச்சு திணறல், மூக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு மற்றும் தீவிரமான பதட்டம் போன்றவற்றுடன் உயர் இரத்த அழுத்த நெருக்கடி ஏற்படலாம்.

இவ்வாறு திடீரென ஏற்படும் உயர் இரத்த அழுத்த நெருக்கடியினால் இரத்த அழுத்தத்தின் அளவு உடல் உறுப்புகளைச் சேதப்படுத்தும் அளவிற்கு அதிகரிக்கிறது.

இவ்வாறு உயர் இரத்த அழுத்த நெருக்கடி ஏற்படுபவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள்:

இரத்தப் பரிசோதனைக்குப் பிறகு உங்கள் மருத்துவரோ, செவிலியரோ உயர் இரத்த அழுத்தத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று கூறினால், அதன் பிறகு மருத்துவர் உங்கள் வாழ்க்கை முறையில் (Life Style) சில மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும் என்று கூறுவார். இவ்வாறு உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

வாழ்க்கை முறை மாற்றங்களில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

 • உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி
 • உடல் எடை குறைப்பு
 • உணவில் உப்பின் அளவைக் குறைத்தல்
 • மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவை அறவே தவிர்த்தல்.

மேலும், உண்ணும் உணவினை சத்தானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் சமவிகித உணவாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

1) ஆரோக்கியமான உடல் எடை பராமரித்தல்:

உடல் எடையைப் பராமரிப்பது இரத்த அழுத்தத்தினை சீராக வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தினைக் குறைக்க விரும்புவர்கள் முதலில் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும். இரத்தக் கொதிப்பும் உடல் பருமனும் ஒன்று சேர்ந்தால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தீங்கு விளைவிக்கிறது. உடல் பருமன் இரத்த சுழற்சியினை (Blood Circulation) பாதிக்கும். மேலும் இவை எலும்புகளில் அழுத்தத்தினையும் உருவாக்குகிறது. உடல் எடை குறைப்பது மிகவும் பயனுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது.

மருத்துவரைக் கலந்து ஆலோசித்துப் பாதுகாப்பான முறையில் உடல் எடையினைக் குறைக்கலாம்.

உடல் நிறைக் குறியீட்டு எண்: (Body Mass Index – BMI):

உங்கள் எடையைக் குறைப்பது தேவையான ஒன்று என்பதில் நீங்கள் உறுதியற்று இருந்தால் மருத்துவரிடம் உங்கள் உடலின் “உடல் நிறைக் குறியீட்டு எண்ணை” (Body Mass Index – BMI) கணக்கிடச் சொல்லுங்கள். உங்களின் எடையின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது என்றால் மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

உடல் நிறைக் குறியீட்டு எண் என்பது உங்கள் உயரத்தில் எடை விகிதம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண் தெரிந்திருப்பது அவசியம்.

2) உடற்பயிற்சி:

உங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண்ணை அதிகரிப்பதற்கும் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைப்பதற்கும் சிறந்த வழி உடற்பயிற்சி ஆகும். அதுவும் வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும்.

நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் (Aerobic Exercise) உடற்பயிற்சிகளான நடை பயிற்சி மற்றும் வீட்டைச் சுற்றி செய்யும் வேலைகள் அனைத்தும் உங்களின் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவும். நீங்கள் இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர் என்றால் எளிய உடற்பயிற்சியினை செய்ய முயற்சி செய்யுங்கள். தியானம், யோகா (தவம்) போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கலாம்.

3) ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

சத்தான உணவு முறை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தினைப் பெற மற்றுமொரு திறவு கோலாக விளங்குகிறது. உணவுகளில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைந்த மற்றும் சீரான சம அளவு ஊட்டச்சத்தினைக் கொண்டவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

 • காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் புரதச்சத்து நிறைந்தவை மற்றும் குறைந்த கொழுப்பு (அல்லது) கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • வழக்கமான நாள் என்பது மூன்று முழு உணவுடனும், இரண்டு அல்லது மூன்று சிற்றுண்டிகளுடனும் இருக்க வேண்டும்.
 • நாம் உண்ணும் உணவானது நிறமுடையதாகவும், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுடனும் குறைந்த புரதச்சத்துடனும் உணவை நிறைவு செய்ய வேண்டும்.
 • கொட்டைகள், விதைகள், புதிய பழங்களைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்து அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த பொருட்களை உண்பதே ஆரோக்கியமான உணவுமுறை ஆகும். உணவில் சோடியம் உப்பு மற்றும் செயற்கையான முறையில் வெண்மையாக்கப் பட்ட‌ சர்க்கரை (Refined Sugar) போன்றவை உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.
 • கொழுப்புகள் அடங்கியுள்ள இறைச்சி உணவினை அறவே தவிர்க்க வேண்டும்.
 • காலையில் நல்ல ஆரோக்கியமான உணவினை வயிறு நிறைய உண்ணலாம். ஆனால் இரவில் அரை வயிறு உணவினை உண்டாலே போதுமானது. வயிறு நிறைய உணவினை உண்ணும்போது அவ்வுணவு செரிக்க உடல் உழைப்பினை மேற்கொள்ள வேண்டும்.
 • உணவினை ஒரு நாளைக்கு மூன்று முறை வயிறு முட்டச் சாப்பிடுவதைத் தவிர்த்து ஐந்து முறை அரை வயிறு உணவினை உண்பதே போதுமானது.
 • உண்ட உணவு செரிமானம் அடைந்து பசி ஏற்பட்ட பிறகே அடுத்த வேளை உணவினை சாப்பிட வேண்டும்.
 • அதுவும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.
 • குறந்த அளவு உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காகப் பட்டினி கிடப்பதும் தவறு. பட்டினியாக இருப்பதனால் உடலில் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. அதுவும் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. உண்ணும் உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போது தான் உணவானது இரைப்பையில் விரைவில் செரிமானம் அடையும்.
 • எந்தெந்த உணவுகளை எப்பொழுது உண்ண வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். உணவில் அரிசி வகைகளை மட்டுமே உண்ணாமல் கம்பு, சோளம் மற்றும் திணை போன்ற சிறுதானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் கீரை போன்றவற்றை மதிய உணவிலும், இரவு உணவிற்கு பெரும்பாலும் இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் போன்ற எளிதில் செரிமானமாக்க்கூடிய உணவு வகைகளைச் சேர்க்க வேண்டும்.
 • காலையும் மாலையும் சிறிது நேர உடற்பயிற்சி அவசியம். அதோடு நடை பயிற்சியும் அவசியம்.
 • உணவில் அதிக அளவு காய்கற்கள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகளில் குறிப்பாக குப்பைக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் சிறுகீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்குத் தேவையான ஆவதற்குத் தேவையான உடல் உழைப்பு மிகவும் அவசியம்.
 • எண்ணையில் பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், சீரணமாகத உணவுகள், காபி, தேனீர் மற்றும் உப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
 • இரவு உணவு அருந்திய உடன் உறங்கச் செல்லக் கூடாது. இரவு உணவுக்கும் உறங்கச் செல்வதற்கும் இடையில் குறைந்தது ஒரு மணி நேரம் இடைவெளி அவசியம்.
 • உறக்கம் என்பது மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். ஒரு மனிதன் சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இரவு அதிக நேரம் விழித்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்க்கச் சென்று அதிகாலையில் எழ வேண்டும். குறிப்பாகப் பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
 • மேலும் சுய இன்பத்தில் ஈடுபடுவர்களுக்கும், எந்நேரமும் காமச் சிந்தனையுடன் இருப்பவர்களும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. எனவே இவற்றைத் தவிர்த்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
 • மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
 • உப்பு அதிகம் உள்ள ஊறுகாய் மற்றும் கருவாடு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4) சோடியம் உப்பைக் குறைத்தல்:

உப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஒன்றோடொன்று சேர்த்துக் குழம்பிக் கொள்ள வேண்டாம். ஆய்வுகளின் படி நீங்கள் தினமும் உபயோகிக்கும் உப்பில் சிறிதளவை நீக்கினால் கூட அது உங்களின் குறை இரத்த அழுத்தத்திற்கு அதாவது 8 mmHg அளவிற்குக் கொண்டு செல்லும். நீங்கள் நாள் ஒன்றுக்கு உணவில் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு 1500 (mg) மில்லிகிராமிற்கு மேல் செல்லக் கூடாது.

5) பொட்டாசியம் அளவை அதிகரித்தல்:

நீங்கள் அதிகளவில் உட்கொள்ளும் பொட்டாசியத்தினால் சோடியத்தால் ஏற்படும் விளைவுகளை ஈடு செய்ய முடியும். பொட்டாசியம் நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தத்திற்காகப் பின்பற்றப் படும் உணவு முறைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

நாளொன்றுக்கு நீங்கள் உட்கொள்ளும் பொட்டாசியத்தின் அளவு 4700 மில்லிகிராமிற்கு மேல் செல்லக் கூடாது.

6) மன அழுத்தத்தைக் குறைத்தல்:

மன அழுத்தம் உங்களின் இரத்த அழுத்த அளவினைத் தற்காலிகமாக உயர்த்துகிறது. உங்கள் மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கு குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும். அதுவும் நீங்கள் உடல் பருமன் காரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளானவர் என்றால் மேற்கூறியது மிகவும் அவசியம்.

மன அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் கோபம், வெறுப்பு, எரிச்சல் மற்றும் எப்பொழுதும் தீராத சிந்தனையில் இருத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்ததிலிருந்து அமைதி பெற பல செயல்பாடுகள் உள்ளன.

சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள்மூலம் இரத்த அழுத்தத்திற்குக் காரணமான மன அழுத்தத்தை எதிர்க்க முடியும்.

மனக் கவலையைத் தவிர்க்க மனதை ஒருநிலைப்படுத்தவும் தியானம், யோகா (தவம்) போன்றவற்றை மேற்கொள்ளலாம். காலையில் வழக்கமாக அமைதியான சூழலில் பத்து நிமிட தியானம் மிக அதிக அளவில் மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.

7) மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்:

மதுவின் அளவினை குறைத்தல் அல்லது முற்றிலும் தவிர்த்தல் போன்றவை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவுகிறது. சிவப்புத் திராட்சை ரசம் (Red wine) கூடப் பொதுவாக அதன் ஆரோக்கியமானப் பலன்களுக்கு மாறாக உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிர்மறையான விளைவினை ஏற்படுத்துகிறது.

உங்களின் நீண்டகால இரத்த அழுத்தத்தில் புகைப்பிடித்தல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. புகைப் பிடித்தல் உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்தலை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். எனினும் பல வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றிப் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

உயர் இரத்த அழுத்தத் தற்காப்பு முறைகள்:

வருமுன் காப்பதே சிறந்தது” எனவே உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கீழ்கானும் தடுப்பு முறைகளைப் பின்பற்றலாம்.

சோடியம் குறைவாக உள்ள உணவினை உண்ணுதல், இதயம் சார்ந்த உடற்பயிற்சியினை ஒரு மணி நேரம் விகிதம் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்து வர வேண்டும். உங்களின் பரம்பரையில் யாருக்கேனும் இதயம் சார்ந்த நோய் அல்லது இரத்தக் கொதிப்பு உள்ளதா எனக் கண்டறிய வேண்டும். அவ்வாறு யாருக்கேனும் இருந்தால் உங்களுக்கு இரத்தக் கொதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது உங்கள் மருத்துவருக்கும் மேற்கொண்டு உங்களைச் சிகிச்சை செய்யப் பயனுள்ள தகவலாக அமையும்.

English Summary:

All about High Blood Pressure and causes of high blood pressure, food and life-style habits to reduce High BP explained in simple Tamil.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.